×

ஒரே நாளில் 9 இடங்களுக்கு சுற்றுலா முந்நூறு ரூபாய் போதும்… மூணாறை சுத்தி பார்க்கலாம்… அரசு பஸ்சில் ஜாலி டிரிப்

மூணாறு: மூணாறில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க ரூ.300 செலவில் பஸ் வசதியை கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இது சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர். மூணாறில் அதிகமாக நம் கண்களைக் கொள்ளை கொள்வது தேயிலைத் தோட்டங்கள்தான். அதனிடையே வளைந்து, நெளிந்து செல்லும் மலைச்சாலைகளைக் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். இங்கு தினசரி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

இயற்கை எழில் நிறைந்த இடங்கள் மூணாறில் ஏராளம். சின்ன, சின்ன நீர்த்தேக்கங்கள், வரிசையாக செல்லும் பறவைக் கூட்டம், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என பஸ் பயணத்தின்போது மனதை ரசிக்கும் இடங்கள் அதிகம். விடுமுறை காலங்களில் கேரளா மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து குவிவர். மூணாறு அருகே மாட்டுப்பட்டி, குண்டளை எக்கோ பாயிண்ட், குண்டளை அணைக்கட்டு, டாப் ஸ்டேஷன், தேயிலை அருங்காட்சியகம், ஆனையிரங்கல் அணைக்கட்டு, மலைக்கள்ளன் குகை, ஆரஞ்சு தோப்பு, ஸ்பைசஸ் தோட்டம் விசிட், பூப்பாறை, சதுரங்கப்பாறை என பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

இவைகளை சுற்றுலாப் பயணிகள் தனியார் வாகனங்களில் சென்று ரசிக்கின்றனர். இதனால் கூடுதல் பொருட்செலவு ஏற்படுகிறது. எனவே, மூணாறுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவர, கேரள அரசு போக்குவரத்து கழகம் சுற்றுலா பயணத்திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படும் இந்த பஸ்சில் ஒரே நாளில் 9 சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்கலாம். காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பஸ் பயணம் மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

இதற்காக 2 பஸ்களை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு பஸ் மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி, குண்டளை எக்கோ பாயிண்ட், குண்டதங் அணைக்கட்டு, டாப் ஸ்டேஷன், தேயிலை அருங்காட்சியகம் வரையும், மற்றொரு பஸ் மூணாறில் இருந்து ஆனையிரங்கல் அணைக்கட்டு, மலைக்கள்ளன் குகை, ஆரஞ்சு தோப்பு, ஸ்பைசஸ் தோட்டம் விசிட், பூப்பாறை, சதுரங்கப்பாறை வரையும் இயக்கப்படுகிறது. ஒரு பஸ்சில் 50 பேர் வரை பயணம் செய்யலாம். ஒவ்வொரு இடத்திலும், சுமார் ஒரு மணி நேரம் வரை பொழுது போக்கலாம். இந்த பயணத் திட்டம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

The post ஒரே நாளில் 9 இடங்களுக்கு சுற்றுலா முந்நூறு ரூபாய் போதும்… மூணாறை சுத்தி பார்க்கலாம்… அரசு பஸ்சில் ஜாலி டிரிப் appeared first on Dinakaran.

Tags : Munara Chuthi ,Munnar ,Kerala Government Transport Corporation ,Dinakaran ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்